Thursday, April 29, 2010

நானும் டி வீ யும்

சின்ன வயசில்  தெருவில் எப்பவும் அண்ணாந்து பார்த்துதான் நடந்து பழக்கம். அப்பத்தான் எந்த வீட்டுல ஆண்டெனா இருக்குன்னு தெரியும்! டி வீ என்ற இரண்டெழுத்து என் வாழ்க்கையில் நுழைய தொடங்கிய காலம். தோழிகள்/ தோழர்கள்  பட்டாளம் சூழ வீடு வீடாக சென்று கதவை பிடித்துத் தொங்கியபடியே, "அம்மா அக்கா, ப்ளீஸ் டி வீ பார்க்க விடுங்க" என்று கெஞ்சிய காலம் பசுமையாய் மனதிற்குள்........
காண்போம் கற்போம், உழைப்பவர் உலகம், வயலும் வாழ்வும் (?!) என்று ஒரு நிகழ்ச்சி விடாமல் பார்த்து, ஒளியும் ஒலியும் பார்க்க தவம் கிடந்து.... அது ஒரு காலம்.
மனோரமாவின் நாடகம், (காட்டுப்பட்டி  சித்திரத்திலே என்று நினைக்கிறேன்) பார்த்து விழுந்து விழுந்து சிரித்து காலத்தை போக்கியதில் மார்க் ரொம்ப குறைந்து போனது. அம்மா வீடு வீடாக தேடிக்கொண்டே வருவாள். அப்பொழுதும் உடனே எழுந்து விடாமல் பம்மியபடி...
கடைசியில், தியேட்டர் கணக்காக விளக்கு அடித்து, இழுத்துபோக வேண்டிய நிலைமை!
இது தவிர யார் வீட்டிலாவது டெக் வாடகைக்கு எடுத்து இருக்கிறார்கள் என்று தெரிந்தால் போதும்... அவர்கள் வீட்டிலேயே தஞ்சம் ஆகி விடுவோம்.
திருமணம் முடிந்த வீடுகளில் கண்டிப்பாக டெக் எடுப்பார்கள். கல்யாண வீடியோவோடு, இரண்டு முன்று புதுப் படங்களும் பார்ப்பார்கள். கூட்டத்தில் யார் என்ன  என்றெல்லாம் கவனிக்காமல் இனிப்பு, மிச்சர், காபி எல்லாம் கொடுப்பார்கள். (அதனால் எனக்கு கல்யாண வீட்டில் வீடியோ பார்க்க ரொம்ப இஷ்டம்).
என் போக்கை கவனித்த என் அம்மா, கண்டிப்பாக வீட்டில் டி வீ பொட்டி வாங்க வேண்டும் என்று நச்ச ஆரம்பித்து விட்டார்கள். (என்னைப் பார்த்து என் இரண்டு தங்கைகளும் கெட்டுப் போகிறார்களாம்!)
ஒரு வழியாக அப்பா டி வீ வாங்கிக் கொடுத்தார். அதற்கு கிடைத்த  மரியாதை வீட்டு மாபிள்ளைக்கு கூட கிடைக்காது!
பிறகு ஒரு வழியா வீட்டிலேயே வார இறுதி படங்கள், (தமிழ், ஹிந்தி, பிற மொழிப் படங்கள் ), ஒ ஒ, எல்லாம் பார்த்து மகிழ்ந்தேன்.
போனஸ் ஆக எங்கள் ஊரில் ரூபவாகினி (சிலோன் தொலைக்காட்சி) வேறு நன்றாகத் தெரியும். சிங்களத் தமிழை ரசித்து அற்புதமான பல நிகழ்ச்சிகளை பார்க்க முடிந்தது.
நானே ஒரு குட்டி டி வீ மெக்கானிக் ஆகி விட்டேன்! ஆண்டெனாவை திருப்பி சரியான சேனல் வரும் வரை ஓயாது விடா முயற்சியோடு முனைவேன். (ரொம்ப முக்கியம்!)
வாரத்திற்கு ஒரு சினிமா, ஒரு ஒ ஒ, சின்ன நாடகங்கள் - நன்றாகத்தான் இருந்தது.
இப்பொழுது வீட்டில் டி வீ  யே இல்லை. கல்யாணத்திற்கு முன்னரே நானும் ரங்குவும் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம்.
டி வீ பார்க்காமல் இருப்பதே நன்றாக இருக்கிறது. ஒரு வேளை எல்லாம் அளவுக்கு மிஞ்சி விட்டதோ என்று தோன்றுகிறது. இருபத்தி நாலு மணி நேரமும் நிகழ்ச்சி இருந்தாலும், எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாலும் பார்க்க பிடிக்கவில்லை.
அதனால் ஒன்றும் குறைந்து விடவில்லை. எப்பவாவது அம்மா வீட்டிற்கு  செல்லும்போது பார்த்தால் கூட, சீரியல் கதையை ஊகிப்பது கஷ்டமாக இல்லை. இன்னும் அந்த கதாநாயகி அழுது கொண்டே தான் இருக்கிறாள்!

No comments:

Post a Comment