Thursday, April 29, 2010

நானும் டி வீ யும்

சின்ன வயசில்  தெருவில் எப்பவும் அண்ணாந்து பார்த்துதான் நடந்து பழக்கம். அப்பத்தான் எந்த வீட்டுல ஆண்டெனா இருக்குன்னு தெரியும்! டி வீ என்ற இரண்டெழுத்து என் வாழ்க்கையில் நுழைய தொடங்கிய காலம். தோழிகள்/ தோழர்கள்  பட்டாளம் சூழ வீடு வீடாக சென்று கதவை பிடித்துத் தொங்கியபடியே, "அம்மா அக்கா, ப்ளீஸ் டி வீ பார்க்க விடுங்க" என்று கெஞ்சிய காலம் பசுமையாய் மனதிற்குள்........
காண்போம் கற்போம், உழைப்பவர் உலகம், வயலும் வாழ்வும் (?!) என்று ஒரு நிகழ்ச்சி விடாமல் பார்த்து, ஒளியும் ஒலியும் பார்க்க தவம் கிடந்து.... அது ஒரு காலம்.
மனோரமாவின் நாடகம், (காட்டுப்பட்டி  சித்திரத்திலே என்று நினைக்கிறேன்) பார்த்து விழுந்து விழுந்து சிரித்து காலத்தை போக்கியதில் மார்க் ரொம்ப குறைந்து போனது. அம்மா வீடு வீடாக தேடிக்கொண்டே வருவாள். அப்பொழுதும் உடனே எழுந்து விடாமல் பம்மியபடி...
கடைசியில், தியேட்டர் கணக்காக விளக்கு அடித்து, இழுத்துபோக வேண்டிய நிலைமை!
இது தவிர யார் வீட்டிலாவது டெக் வாடகைக்கு எடுத்து இருக்கிறார்கள் என்று தெரிந்தால் போதும்... அவர்கள் வீட்டிலேயே தஞ்சம் ஆகி விடுவோம்.
திருமணம் முடிந்த வீடுகளில் கண்டிப்பாக டெக் எடுப்பார்கள். கல்யாண வீடியோவோடு, இரண்டு முன்று புதுப் படங்களும் பார்ப்பார்கள். கூட்டத்தில் யார் என்ன  என்றெல்லாம் கவனிக்காமல் இனிப்பு, மிச்சர், காபி எல்லாம் கொடுப்பார்கள். (அதனால் எனக்கு கல்யாண வீட்டில் வீடியோ பார்க்க ரொம்ப இஷ்டம்).
என் போக்கை கவனித்த என் அம்மா, கண்டிப்பாக வீட்டில் டி வீ பொட்டி வாங்க வேண்டும் என்று நச்ச ஆரம்பித்து விட்டார்கள். (என்னைப் பார்த்து என் இரண்டு தங்கைகளும் கெட்டுப் போகிறார்களாம்!)
ஒரு வழியாக அப்பா டி வீ வாங்கிக் கொடுத்தார். அதற்கு கிடைத்த  மரியாதை வீட்டு மாபிள்ளைக்கு கூட கிடைக்காது!
பிறகு ஒரு வழியா வீட்டிலேயே வார இறுதி படங்கள், (தமிழ், ஹிந்தி, பிற மொழிப் படங்கள் ), ஒ ஒ, எல்லாம் பார்த்து மகிழ்ந்தேன்.
போனஸ் ஆக எங்கள் ஊரில் ரூபவாகினி (சிலோன் தொலைக்காட்சி) வேறு நன்றாகத் தெரியும். சிங்களத் தமிழை ரசித்து அற்புதமான பல நிகழ்ச்சிகளை பார்க்க முடிந்தது.
நானே ஒரு குட்டி டி வீ மெக்கானிக் ஆகி விட்டேன்! ஆண்டெனாவை திருப்பி சரியான சேனல் வரும் வரை ஓயாது விடா முயற்சியோடு முனைவேன். (ரொம்ப முக்கியம்!)
வாரத்திற்கு ஒரு சினிமா, ஒரு ஒ ஒ, சின்ன நாடகங்கள் - நன்றாகத்தான் இருந்தது.
இப்பொழுது வீட்டில் டி வீ  யே இல்லை. கல்யாணத்திற்கு முன்னரே நானும் ரங்குவும் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம்.
டி வீ பார்க்காமல் இருப்பதே நன்றாக இருக்கிறது. ஒரு வேளை எல்லாம் அளவுக்கு மிஞ்சி விட்டதோ என்று தோன்றுகிறது. இருபத்தி நாலு மணி நேரமும் நிகழ்ச்சி இருந்தாலும், எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாலும் பார்க்க பிடிக்கவில்லை.
அதனால் ஒன்றும் குறைந்து விடவில்லை. எப்பவாவது அம்மா வீட்டிற்கு  செல்லும்போது பார்த்தால் கூட, சீரியல் கதையை ஊகிப்பது கஷ்டமாக இல்லை. இன்னும் அந்த கதாநாயகி அழுது கொண்டே தான் இருக்கிறாள்!
சும்மா பதிவுகளை வேடிக்கை பார்க்க வந்தவளை கொசுவத்தி சுத்த வெச்சுட்டாங்க...
இனிமே முடியாது ஆரம்பிக்க வேண்டியது தான்.
பழைய நினைவுகள் என்றதும் கலங்கிய புகை மூட்டமாய் சிறு வயது தீபாவளி அதிகாலை தான் ஞாபகத்திற்கு வருகிறது. கையெல்லாம் மருதாணி, வீடு முழுக்க காய்ந்த மருதாணி  உதிர "என் கை எவ்வளவு பத்திருக்கு?" பார்த்தது நினைவில் உள்ளது.
பாட்டு கற்கிறேன் பேர்வழி என்று வகுப்பு முழுவதும் காரணமின்றி  சிரித்து திட்டு வாங்கியது, பள்ளியில் பாதி நாட்கள்  வகுப்புக்கு வெளியே (ஹோம் வொர்க் செய்யாததால்) வெளியே முட்டி போட்டது, கிரிக்கெட் பார்ப்பதற்காக  வயிற்று வலி என்று லீவ் போட்டது, பாட புத்தகத்தில் உள்ள அத்தனை பேரையும் திட்டி தீர்த்தது, தோழிகள் புடை சூழ பள்ளியிலேயே கல்லூரி போன்று கொட்டம் அடித்தது (கல்லூரி யில் செய்த கலாட்டா வை படிக்க... வேறு வழியில்லை, நீங்கள் சிறிது காலம் காத்திருந்து தான் ஆக வேண்டும்!). "உன் தங்கை எப்படி படிக்கிறா பாரு? உனக்கு வெக்கமா இல்லை?" ஸ்கூல் பிரேயர் மாதிரி தினமும் ஆசிரியைகள் சொன்னது, அதையும் மீறி அடங்கா பிடாரியாய் வளர்ந்தது என சிறு வயது நினைவுகளே சிரிப்பை வரவழைக்கின்றன.
என்னுடைய குணாதிசயமாக நான் நினைக்கும் விடாத சிரிப்பு குறைந்துதான் போய்விட்டது.
இப்பொழுதெல்லாம்  ஒரு நாளைக்கு இரண்டு முறை சிரிப்பேனோ என்னவோ?
காகித ஓடம் கடலலை மேலே .... பாட்டு மாதிரி பெரிய துக்கம் ஒன்றும் இல்லை. ஆனால் சிரிப்பதற்கு காரணம் தேவைப்படுகிறது.
முன்பெல்லாம் அடக்க மாட்டாத சிரிப்பு. அம்மா ஸ்பீட் பிரேக்கர் போட்டு கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுது எங்கே போயிற்று? மீட்டு எடுக்கத்தான் வந்துள்ளேன்.

Thursday, April 8, 2010

வணக்கம்